அவுஸ்திரேலியாவில் சாவடைந்த இளம் தந்தையின்  சோகம் நிறைந்த  வாழ்க்கை : நிறைவேறாத ஆசைகளுடன் முடிந்து போகும் வாழ்வு !

1
9015

 

கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகமாக  யோசித்தமையால்  மூளையின்  நரம்பு  வெடித்து  சாவடைந்த இளம்  தந்தை மல்லாவியை  சேர்ந்த திருவருள்குமாரின் வாழ்வு கவலைக்குரியது.

கடந்த 2012 ம் ஆண்டு 10  மாதம்  இலங்கையில் இருந்து படகு மூலம் அகதியாக அவுஸ்திரேலியா சென்ற திருவருள்குமார் அகதி அந்தஸ்து கிடைக்காமல் மிகுந்த துயரத்தில்  வாழ்ந்துள்ளார். இவர் இலங்கையில் இருந்து புறப்பட்ட பின்னர் தனது குழந்தைகளை பார்க்க முடியவில்லை என்ற  ஏக்கத்துடன்  வாழ்ந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்  இவரது கடைசி மகன் அதுர்சன் இறந்து விட்ட நிலையில் அவரது இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ளவில்லை என்ற ஏக்கத்துடன் இவரது வாழ்க்கை நகர்ந்துள்ளது.

மனைவி தவராணி , மகள்கள் சரண்யா, அதுர்சா ஆகியோரை தன்னுடன்  வாழக்கூடிய தகுதியை பெறுவதற்கு தனக்குள்ள ஒரே அதிகாரமான அகதி அந்தஸ்தினை  விரைந்து வழங்கும் படி அவுஸ்திரேலிய அரசுக்கு பல தடவைகள் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கைகள் நிறைவேற முன்னரே காலன் இவரை அழைத்து சென்று விட்டதாக இவரது நண்பர்கள் கவலை  தெரிவித்தனர்.

பழகுவதற்கு மிகவும் இனிமையான  சுபாவம் கொண்ட திருவருள்குமார் கடையொன்றில் மிகவும் நம்பிக்கை பாத்திரமானவராக வேலை செய்துள்ளார். கடமை நேரமான எட்டு மணி நேரம் கடந்தும் அதிகான நேரத்திலும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இரவு பகல் உழைப்பு –குடும்பத்தை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் போன்ற மனச்சுமைகள் இவரை சாவு நிலைமைக்கு தள்ளியுள்ளது.

இவர் சாவடைந்த  அன்றைய தினம் வேலை முடிந்து  தங்குமிடம்  வந்தவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடனும் தொலைபேசி கதைத்து  விட்டு உறங்கியுள்ளார். காலையில் இவர் எழும்பும் நேரம் கடந்தும் தூக்கத்தில் இருந்தமையால் இவரது நண்பர்கள் எழுப்பிய போது  வாயில் இரத்தம் வழிந்த நிலையில் சாவடைந்திருந்துள்ளார். இவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அதிகமாக யோசனையால் மூளை நரம்பு வெடித்து இவர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது அவரது உடலை இலங்கைக்கு குடும்பத்தினரிடம் அனுப்புவதற்கு அவரது நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது. அதே வேளை  மாற்று ஒழுங்காக திருவருள்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து அங்கேயே இறுதி நிகழ்வுகளை செய்வதற்கும் ஒழுங்குகள் மேட்கொள்ளபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  .

வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கேட்டு காத்திருக்கும் எண்ணற்ற தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை முறை அனைத்திலும் இவ்வாறான அளவு கடந்த யோசனை ஆட்கொண்டு தான் இருக்கின்றன. இவரது மரணம்  சொல்லுகின்ற செய்தி மூலம் எனையோருக்காவது விமோர்சனம் விரைவில் கிடைக்குமாயின் திருவருள்குமாரின் ஆத்மா மகிழ்ச்சியுடன் சாந்தியடையும்.

Share This: