ஒரு இலட்சம் பவுண்ட் செலவு செய்து திருமணத்தை நடத்திய தமிழ் மன்னன் சிறைசென்ற வரலாறு. (Photos)

0
127363

லண்டனில் உள்ள பிரபல பத்திரிகைகளில் இலங்கை தமிழர்கள் பற்றி செய்திகள் வருவதுண்டு. அவை லண்டனில் இலங்கை தமிழர்கள் செய்யும் மதிப்பார்ந்த சாதனைகள் திறமைகள் பற்றியதல்ல. கிரடிட் காட் மோசடிகள், கொள்ளைகள் கொலைகள் பற்றிய செய்திகளே முக்கிய பத்திரிகைகளில் வருவதுண்டு. அவ்வாறான சாதனை ஒன்று பற்றி லண்டனில் வெளியாகும் பிரபல பத்திரிகைகளான த சண், டெயிலிமெயில் உட்பட பல பத்திரிகைகளில் முழுப்பக்க செய்தியாக இந்த வாரத்தில் வந்துள்ளன.

பலரும் தமது திறமைகளை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதுண்டு, ஆனால் சிலர் தமது திறமைகளை இவ்வாறான மோசடி குற்றங்களை புரிவதற்கு பயன்படுத்துகின்றனர் என சில பத்திரிகைகள் குற்றம் சாட்டியுள்ளன.

கூகிளில் கிரடிட் காட் மோசடி என்ற சொல்லை தேடினால் அதில் வரும் பெரும்பாலான செய்திகளில் இலங்கையர்கள் உலக நாடுகளில் செய்து வரும் கிரடிட் காட் மோசடி பற்றிய செய்தியாகவே இருக்கும்.

லண்டனில் சில தமிழர்கள் தொழில் எதுவும் இன்றி ஆனால் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அடிக்கடி சிங்கப்பூர் இந்தியா, தாய்லாந்து என சென்று வருவார்கள். அவர்களை லண்டனில் உள்ள தமிழர்கள் கள்ள மட்டை வியாபாரிகள் என அழைத்து கொள்வார்கள்.

லண்டனில் கிரடிட் காட் மோசடியில் இலங்கை தமிழர்களே முன்னணியில் இருப்பதால் தமிழர்கள் நடத்தும் பலசரக்கு கடைகள், மற்றும் உணவு விடுதிகளில் கிரடிட் காட் மூலம் பணம் வழங்கும் முறையை பொலிஸார் தடை செய்திருக்கிறார்கள்.

இன்ரப்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் தேடப்படுவோர் பட்டியலில் 115 இலங்கையர்களின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சிங்களவர்கள், முஸ்லீம்கள், தமிழர்கள் என அனைவரும் அடங்குகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிரடிட் காட் மோசடி போன்ற குற்றங்களுக்காகவே தேடப்படுகிறார்கள்.

இவ்வாறு பிரித்தானியாவில் நவீன முறையில் கிரடிட் காட் மூலம் கொள்ளையிட்டு ஆடம்பர திருமணம் செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த 25வயதுடைய கிசோக் தவராசா என்ற நபர் லண்டனில் உள்ள டெஸ்கோ என்ற நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டெஸ்கோ நிறுவனத்திலிருந்து மாத சம்பளமாக 1300 பவுண் பெற்று வந்தார்.

25வயதுடைய கிசோக் தவராசா என்ற இந்நபர் கடந்த யூலை மாதம் 28வயதுடைய கீர்த்திகா ஸ்கந்ததேவா என்ற பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த பின் லண்டன் நகரில் உள்ள ஆடம்பர ஹொட்டல்களில் ஒன்றான க்ரோஸ்வெனொர் கவுஸ் என்ற ஹொட்டலில் திருமண வரவேற்பை நடத்தியுள்ளார். 17 தட்டு கேக்கை வெட்டி தவராசாவும் அவரின் மனைவி கீர்த்திகாவும் அனைவரையும் அசத்தினார்கள்.

download-6-1

இலங்கையின் வரலாற்றில் ஆறரை இலட்சம் ரூபா செலவு செய்து திருமண கேக்கை யாரும் செய்ததாக வரலாறு இல்லை. இலங்கையில் பிறந்த தவராசா இந்த வரலாற்று சாதனையை செய்திருக்கிறார்.

கீர்த்திகாவின் தந்தை ஸ்கந்ததேவா லண்டன் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமானவர். முன்னர் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொறுப்பாளராக இருந்தவர். தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் என அறியப்பட்டவர். தற்போது லண்டனில் மாவீரர் துயிலும் இல்லத்தை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய பவுணை செலவு செய்து அரச குடும்பத்தினரின் திருமணத்தை போல தங்கள் திருமணத்தை தனது கணவர் நடத்தி வைத்ததாக கீர்த்திகா தெரிவித்திருக்கிறார்.

இந்த ஹொட்டலில் அரச குடும்பத்தினரும் பெரும் தொழில்அதிபர்கள், கோடீஸ்வரர்கள், அரபுநாடுகளில் உள்ள மன்னர் குடும்பத்தினரின் திருமண வரவேற்பு மற்றும் பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்கள் நடப்பதுண்டு. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரால் அக் ஹொட்டலில் திருமண விழாக்களை நடத்த முடியாது.

ஹொட்டல் மண்டப ஒருநாள் வாடகை 60ஆயிரம் பவுண்கள். இலங்கை பணத்தில் ஒரு கோடி எட்டு இலட்சம் ரூபாவாகும். மேசை விரிப்பு அலங்காரத்திற்கு 20ஆயிரம் பவுண்கள், இலங்கை பணத்தில் 35 இலட்சம் ரூபா, 17 அடுக்கு தட்டு கொண்ட கேக் 3500 பவுண் இலங்கை பணத்தில் ஆறரை இலட்சம் ரூபா செலவில் செய்யப்பட்டிருந்தது. 400 விருந்தினர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 150 பவுண் பெறுமதியான உணவுகள் வழங்கப்பட்டது. இதற்கென 60ஆயிரம் பவுண்கள் செலவு செய்யப்பட்டது. இலங்கை ரூபாவில் ஒரு கோடி எட்டு இலட்சம் ரூபாவாகும். இதுதவிர விஷ்கி, வைன், உட்பட மதுவகைகளுக்கு 40ஆயிரம் பவுண்கள் இலங்கை பணத்தில் 71 இலட்சம் ரூபாவை செலவு செய்திருந்தார்.

download-5-1

இதுதவிர திருமண உடைகள், மற்றும் செலவுகளுக்காக 35ஆயிரம் பவுண் செலவு செய்திருந்தார். மணமகளுக்கு வாங்கிய தாலி உட்பட நகைகள் இதில் சேர்க்கப்படவில்லை. வீடியோ புகைப்பட செலவுகளும் இதில் சேர்க்கப்படவில்லை.

மணமக்களை மண்டபத்திற்கு அழைத்து வந்த கார் கோடிஸ்வரர்களின் திருமணத்திற்கு பயன்படுத்தும் வாடகைகாராகும். இதன் வாடகை 6ஆயிரம் பவுண், இலங்கை நாணயத்தில் 10 இலட்சம் ரூபாவாகும்.

லண்டனில் 50வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த 50 வருட வரலாற்றில் எந்த ஒரு தமிழரும் செய்யாத அளவிற்கு பிரமாண்டமான முறையில் தனது திருமணத்தை நடத்தி முடித்தார் கிசோக் தவராசா.

இது லண்டனில் உள்ள தமிழர்களை மட்டுமல்ல ஏனைய மக்களுக்கும் பெரும் ஆச்சரியமாகவும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. சாதாரண தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து மாதம் 1300 பவுண்களை மட்டும் சம்பளமாக பெறும் ஒருவரால் அரச குடும்பத்தினரை போல ஆடம்பர ஹொட்டலில் சுமார் ஒன்றரை இலட்சம் பவுண் ( இலங்கை பணத்தில் இரண்டரைக்கோடி ரூபா ) செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த முடிந்தது என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

download-3-2

இவர் இலண்டனுக்கு வந்து சுமார் 5வருடங்களே ஆகிறது. இந்த குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான பணத்தை இவரால் எப்படி உழைக்க முடிந்தது என எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

இதனை அடுத்து இத்தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து தவராசாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இவரிடம் விசாரணை நடத்திய போது கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து நடராசா நந்தகுமார், ஜகமித்திரா விஸ்வநாதன் ஆகிய இரு நண்பர்களுடன் இணைந்து தவராஜா ஏரிஎம் இயந்திரங்களிலிருந்து கிரடிட் காட் மூலம் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது.

ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெரா ஆகிய இரண்டு கருவிகளை எடுத்துக்கொண்ட மூவரும் லண்டன் சூட்டன் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தில் அதனை பொருத்தியுள்ளனர்.

இந்த ஜாமர் கருவி பொருத்தப்பட்டால், ஏ.டி.எம் மையத்தில் நுழைக்கப்பட்ட அட்டை குறீயீட்டு இலக்கத்தை அழுத்தி பணத்தின் தொகையை கோரிய பின் கிரடிட் காட் இயந்திரத்திலேயே நின்று விடும். உரிமையாளருக்கு திரும்ப கிடைக்காது. பணமும் வராது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ரகசிய கமெரா அட்டை உரிமையாளர் அழுத்திய ரகசிய எண்களை பதிவு செய்துக்கொள்ளும் அட்டை திரும்ப கிடைக்காமல் அவர்கள் அங்கிருந்து திரும்பியதும், அந்த அட்டை மற்றும் ரகசிய எண்களை பயன்படுத்தி தவராஜாவும் அவரின் நண்பர்களும் ஏ.டி.எம் மையங்களில் பணத்தை திருடி வந்துள்ளார்.

அதே நவம்பர் மாதம் ஏ.டி.எம் மையத்தில் இரண்டு பெண்களின் அட்டைகள் உள்ளேயே சிக்கியுள்ளது. தங்கள் ஏரிஎம் அட்டை இயந்திரத்தில் சிக்கிவிட்டதால் அவர்கள் அங்கிருந்து சென்று வங்கியில் முறைப்பாடு செய்தனர். வங்கியில் உள்ளவர்கள் வங்கி கணக்கை பரிசோதித்த போது அந்த சிறிது நேரத்தில் அவர்களின் அட்டையில் இருந்து 4,400 பவுண்ட் பணம் எடுக்கப்பட்டது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்ட கமராவில் பதியப்பட்ட காணொளியை வைத்து இந்த மூவரையும் பொலிஸார் தேடி வந்தனர். ஆனால் இவர்களை இனங்கண்டு கைது செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் தான் ஆடம்பரமாக திருமணம் முடித்த தவராசாவின் திருமண வீடியோவும் படங்களும் பொலிஸாரின் கைகளுக்கு கிடைத்தன. ஆடம்பரமாக திருமணம் செய்த தவராசாவே ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை திருடியவர் என்பதை பொலிஸார் உறுதி செய்து கொண்டு அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது அவர் இக்குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன் தனது நண்பர்களான நடராசா நந்தகுமார், ஜகமித்திரா விஸ்வநாதன் ஆகிய நண்பர்களின் விபரங்களையும் பொலிஸாருக்கு வழங்கினார். இதனை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் லண்டனில் பல இடங்களில் உள்ள ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை திருடிய போதிலும் சூட்டன் மற்றும் குரைடன் ஆகிய இடங்களில் உள்ள ஏரிஎம் இயந்திரத்தில் திருடிய சம்பவங்களே தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு இலட்சம் பவுணுக்கு மேல் செலவு செய்து திருமணத்தை நடத்திய இவர் கிரடிட் காட் மூலம் இன்னும் பல இலட்சம் பவுண்கள திருடி இருப்பார்கள் என நம்பபடுகிறது.

இவர்கள் மீது க்ரொய்டன் மாவட்ட நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த க்ரொய்டன் நீதிமன்ற நீதிபதி தவராசாவுக்கு 8மாத சிறைத்தண்டனையும் அவரின் நண்பர்களான நடராசா நந்தகுமார், ஜகமித்திரா விஸ்வநாதன் ஆகியோருக்கு தலா 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இவர்களின் பெயர்களை கிரிமினல் குற்றவாளிகளின் பெயர்பட்டியலில் இணைக்குமாறும் விடுதலையான பின்னரும் இவர்களை கண்காணிப்பில் வைத்திருக்குமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இவர்களின் கோவைகள் ஸ்கொட்லாண்ட் யாட் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் செய்த ஏனைய மோசடிகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்வார்கள். ஏனைய குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால் மேலும் தண்டனைகள் வழங்கப்படலாம்.

இதேவேளை இவர்கள் கிரிமினல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால் இவர்களின் தண்டனைக்காலங்கள் முடிந்த பின்னர் அவர்களை சொந்த நாட்டிற்கு நாடு கடத்தலாம் என்றும் சண் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சாதாரண பிரித்தானிய குடிமக்கள் செல்ல முடியாத அரச குடும்பத்தினர் கோடிஸ்வரர்கள் தொழிலதிபர்களால் மட்டுமே செல்ல முடிந்த ஆடம்பர ஹொட்டலில் தனது திருமணத்தை நடத்தி பலரையும் ஆச்சரியப்படுத்திய தவராசாவும் அவரின் நண்பர்களும் இப்போது லம்பேத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறைச்சாலைக்கு கூட எளிதில் யாரும் செல்ல முடியாதுதான். அங்கு மிகப்பெரிய கிரிமினல் குற்றவாளிகளைத்தான் அடைத்து வைப்பார்கள்.


dsc_1685-1
dsc4563
dsc_0756
dsc_1584
img_8473
dsc_1468
dsc_1737
dsc_1801
dsc_1817
img_8489
img_9718
img_9729
download-2-3
download-4-2கிசோக் தவராசா, நடராசா நந்தகுமார் மற்றும் ஜகமித்திரா விஸ்வநாதன்
கிசோக் தவராசா, நடராசா நந்தகுமார் மற்றும் ஜகமித்திரா விஸ்வநாதன்

Share This: