இன்று முதல் அக்னி வெயில் : சென்னை, ஆசிய நாடுகளில் உள்ளவர்களுக்கான எச்சரிக்கை ?

0
787

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று மே 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அக்னி நட்சத்திரம் என்றால் ஏன் அச்சப்பட வேண்டும்? இத்தனை நாட்களாக வெயில் பட்டையை கிளப்புதே என்று கேட்கின்றனர் பலர். 27 நாட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் என்று ஒன்று இல்லை. ஆனால் மேஷராசியில் நெருப்புக் கிரகமான சூரியன் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் சுடர் விட்டு பிரகாசிக்கும் போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை முழுக்க அமர்ந்து சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தை விட்டு நகரும் போது முடிவடையும். மொத்தம் 24 நாட்கள் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இந்த 24 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால் வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கையுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.தென் மேற்கு பருவ மழைக் காலத்திற்கு முந்தைய காலமாக கத்திரி வெயில் உள்ளது.

வெப்பத்தின் தாக்கம் சூரியன் தனது சுயநட்சத்திரமான கார்த்திகையில் சஞ்சாரிக்கும் காலமே அதிக வெப்பமான நாட்களாக இருக்கும். அதற்கு முந்தைய பரணி நட்சத்திர காலத்தை முன் கத்தரி என்றும் பிந்தைய ரோகிணி நட்சத்திர காலத்தை பின் கத்தரி என்றும் சொல்வதுண்டு. இந்த கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக அக்னியை ஜோதிடம் குறிப்பிடுகிறது.

கவலைப்பட வேண்டாம் ஏற்கனவே தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இந்த வருடம் முன்கூட்டியே ஆரம்பித்து விட்டதோ என்று சந்தேகப் படும் அளவிற்கு நூறு டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால் இப்போது தொடங்கும் கத்தரியைப் பற்றிக் புதிதாகக் கவலைப் படத் தேவையில்லை.

உக்கிரம் தணியும் சில நிலைகளில் கத்திரி முடிந்த பின்பும் வெயிலின் உக்கிரம் நீடிப்பதுண்டு. இந்த வருடமும் அதுபோல ஜூன் முதல் வாரத்தில் அக்னியை விடக் கடுமையான வெயில் இருக்கும். அதே நேரத்தில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெப்பம் குறைவாகவே இருக்கும். கோடைமழை பெய்து அனைத்தையும் தணிக்கும் என்றும் ஜோதிடர்களும் ஆறுதல் செய்தி கூறியுள்ளனர்.

வானிலை எச்சரிக்கை ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை கோடை மழைக்கு வாய்ப்பில்லை. அனல் காற்று வீசும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டத்தில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

என்ன சாப்பிடலாம்? வெப்பத்தினால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் திட உணவை காட்டிலும் திரவ வகை உணவுகளை அதிகளவில் சேர்க்க வேண்டும். இயற்கை பழ ரசங்களை அதிகம் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, பதநீர் பருக வேண்டும். அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

இலவச தண்ணீர், மோர் பந்தல் வெயில் சுட்டெரிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வசதி உள்ளவர்கள் எளியவர்களுக்கு அன்னதானம் தண்ணீர்ப் பந்தல் மோர் பானகம் போன்றவைகளை வழங்குவதன் மூலம் கோடிப் புண்ணியம் பெறலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

Share This: