100 நாள் போராட்டமும் தலைமைகளும்…

0
647

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் போராட்டம் 100 நாட்களைத் தொட்டிருக்கிறது. சில கடந்தும் இருக்கிறது. தங்களது சொந்தக் காணிகளை விடுவிக்க கோரியும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறிவிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு நியமனம் வழங்கக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்கள் அனைத்துமே எந்தவொரு அரசியல் கட்சியின் வழிகாட்டுதல்களோ அல்லது பொது அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளோ முன்னெடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள் தாங்களாகவே அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு திக்குத் திசை தெரியாமல் போராட்ட வழிமுறைகள் புரியாமலும், வழிகாட்டவும், நெறிப்படுத்தவும் உரிய அனுபவங்கள் இல்லாத நிலையிலும் இந்தப் போராட்டங்கள் 100 ஆவது நாளை எட்டியுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எவருக்கும் எத்தகைய அரசியல் பின்னணியும் இல்லை என்பது இந்த போராட்டத்தின் வழிமுறைகளும், செயல் நெறிகளும் தெளிவாக புலப்படுத்துகின்றன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அகில இலங்கை தமிழ் காங்கிரசும், இலங்கை தமிழரசுக் கட்சியும் பின்னர் விடுதலை இயக்கங்களும் தோற்றம் பெற்றன. இத்தகைய தலைவர்களுக்கு மக்களை அணிதிரட்டி அமைப்பு ரீதியாக போராடினால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்பது தெளிவாக புரிந்திருந்தது.

பல்வேறு சவால்களையும், அடக்கு முறைகளையும், சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு உரிமைப் போரை அகிம்சை வழியிலும், ஆயுத வழியிலும் அந்த தலைவர்கள் முன்னெடுத்திருந்தனர். இவர்கள் எந்தவிடத்திலும் தங்கள் அமைப்பை கைவிட்டுவிடவில்லை. தமிழ் மக்களின் ஆயுத ரீதியிலான உரிமைப் போராட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் ஏற்கனவே இருக்கின்ற உரிமைப் பிரச்சனைகளுடன் யுத்தம் விட்டுச் சென்ற காயங்களும் புதிதாக இணைந்து கொண்டுள்ளன. உரிமைப் போராட்டத்திற்கு கட்சியும், அதற்கு என்று ஒரு கொள்கையும், மக்களை அணிதிரட்டக் கூடிய யுக்தியும், அவர்களை அரசியல் ரீதியில் விழிப்பூட்டும் திறமையும் படைத்திருந்த தலைவர்கள் இன்று தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் பிரச்சனைகளையும், யுத்தம் ஏற்படுத்தி இருக்கின்ற புதிய காயங்களையும் தீர்ப்பதற்கு திறமையற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் கவலையாகவும், வேதனையாகவும், விரக்தியாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது.

அனைத்து விடயங்களையும் தேர்தல்களோடு இணைத்து பார்க்கின்ற மனோபாவம் தனிநாடு கேட்டு போராடியவர்களிடமும் குடிகொண்டு இருப்பது மிகவும் வேதனையான விடயம். இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி ஆகியவை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயமாக பாவிக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோன்றின். ஆனால், ஆயுதப் போராட்டத்தில் இருந்து தேர்தல் அரசியலுக்குள் திரும்பியுள்ள அமைப்புக்களிடம் முன்பிருந்த அந்த உறுதிப்பாடு தற்போது துளியளவும் இல்லை என்பதை நினைக்கும் போது ‘பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்’ என்னும் லெனினின் வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.

உண்மையான நெஞ்சுறுதியும், இந்த மக்கள் மத்தியில் இருந்தே நாமும் உருவானோம் என்ற எண்ணமும், அன்றைய சூழலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலேயே ஆயுதம் ஏந்திப் போராடினோம் என்ற உணர்வோ இன்று அந்த தலைவர்களிடம் இல்லாமல் இருக்கிறது. தாங்கள் மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டிருந்த அனுபவங்களை இந்த மக்களுக்கு வழங்கி தலைமை தாங்கும் கடமையில் இருந்து இந்த தலைவர்கள் தவறியிருக்கின்றனர். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் 1961 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் எத்தகைய அறவழிப்போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை என்று அவர்கள் அன்றே முடிவு செய்துவிட்டனர். இதற்கு அகிம்சை வழிப் போராட்டத்தில் தாங்கள் நம்பிக்கையிழந்து விட்டோம் என்றும் காரணம் சொல்லியிருந்தனர். 1970களின் இறுதிப் பகுதியில் உருவான ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் மக்களை அணிதிரட்டுவதற்கு ஜனநாயக வழிகளையே முதலில் பயன்படுத்தின. அந்த நேரத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனியினரால் மக்கள் போராட்டங்களில் பங்கெடுக்க முடியாத நிலை தோன்றியிருந்தது. இலங்கை தமிழசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அது ஒரு மேட்டுக்குடி அரசியல் கட்சி. அவர்கள், பாராளுமன்றத்தை அதி உச்ச நீதிமன்றமாகவும், சபாநாயகரை அதிஉச்ச அதிகாரம் படைத்த நீதிபதியாகவும் கருதி தனது வாதங்களை நீதிமன்றத்தில் வைப்பது போன்று பாராளுமன்றத்தில் முன்வைத்து அதன் மூலம் தீர்வு கிட்டிவிடும் என்று மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இவர்கள் ஆற்றுகின்ற உரைகள் அச்சு, காணொளி ஊடகங்களிலும், சமூக வலையமைப்புக்களிலும் வெளிவருகின்றன. அத்துடன் தங்கள் பணி முடிந்து விட்டதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.

மக்களுடன் நெருங்கிப் பழகுவதை இவர்கள் விரும்பவில்லை. இதனால் மக்களிடம் இருந்து அன்னியப்படுகிறார்கள். இதனையே தமிழரசுக் கட்சியின் தலைமைகளுக்கு எதிரான அண்மைய சம்பவங்களும், விமர்சனங்களும் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களுடன் இரண்டறக் கலந்திருந்தவர்கள். அவர்கள் மத்தியில் இருந்தே தலைவர்களாக உருவானவர்கள். ஆகவே, இவர்கள் இந்த மக்களின் போராட்டங்களில் பங்கெடுப்பதுடன், தலைமை தாங்கி வழிநடத்த வேண்டிய பாரிய கடமையும் இருக்கிறது. இந்தக் கடமையில் இருந்து இவர்கள் தவறிவிட்டனர் என்பதை இந்தப் பத்தி மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.

மறுபுறம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து தமிழ் தேசியம் தொடர்பில் தீவிரமாக பேசி வருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் போராட்ட களத்தில் உள்ள மக்களை அவ்வப் போது சந்தித்து வருகின்றனர். ஆனாலும் அவர்களால் கூட மக்களை அணிதிரட்டி இந்தப் போராட்டத்தை வலுப்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் முன்னகர்த்த முடியவில்லை.

பொது அமைப்புக்களின் கூடாரமாக உருவெடுத்த தமிழ் மக்கள் பேரவையும், தமக்கு தேவையான பொழுது தன்னுடைய எழுச்சியை காட்டுவதற்காக எழுக தமிழ் பேரணிக்காக மக்களை அணிதிரட்டிய வேகத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டி ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பணியை செய்யவில்லை என்பதும் கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான தலைமையை தமிழ் தேசிய இனம் தேடிக் கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் எந்தவொரு தனிநபருக்குமோ அல்லது எந்தவொரு கட்சிக்குமோ அல்லது எந்தவொரு அமைப்புக்குமோ அப்படிபடபட்ட திறன் இல்லை என்பது மக்களின் 100 நாள் போராட்டம் நிருபித்து இருக்கிறது. ஆகவே, இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரு முழுயான கட்டமைப்பை உருவாக்கி தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் மற்றும் ஆயுத போராட்டத்தின் மௌனிப்புக்கு பின் ஏற்பட்டுள்ள புதிய காயங்கள் ஆகியவற்றை தீர்ப்பதற்கு அனைத்து தலைமைகளும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தங்களுடைய அனைத்து திறமைகளையும் ஒன்று திரட்டி தமிழ் சமூகத்தின் நாளைய விடியலுக்காக பாடுபட முன்வரவேண்டும்.

நல்லாட்சி என்று சொல்லிக் கொள்ளும் இந்த அரசாங்கம் தனது சொந்த மக்கள் நூறு நாட்களைக் கடந்தும் வீதியில் இறங்கிப் போராடுவதை பார்த்துக் கொண்டு இருப்பது அதன் பெயருக்கு அழகல்ல. ஆகவே, விரைந்து அந்த மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். இதன் மூலமே மக்கள் ஜனநாயகத்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் நம்பிக்கை வைப்பதற்கு வழி பிறக்கும்.

Share This: