பப்புவா நியூகினியா முதல்தொகுதி அகதிகள் அமெரிக்கா புறப்பட்டனர்.

0
526

அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல்தொகுதி அகதிகள் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பப்புவா நியூகினியின் மனுஸ் தடுப்பு முகாமிலிருந்த 22 பேர் நேற்று காலை Port Moresby-யிலிருந்து மணிலா நோக்கிப் பயணமாகினர். பின்னர் மணிலா சென்றடைந்து இவர்கள் அங்கிருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கும் பிரதமர் Malcolm Turnbull-க்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், அங்குள்ள வெவ்வேறு மாநிலங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும், அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தின் வரையறைகளின்படி, இவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை நவுறு தடுப்பு முகாமிலுள்ள 27 பேர் அடங்கிய மற்றுமொரு தொகுதி அகதிகள், இன்று 27ம் திகதி அமெரிக்கா நோக்கிப் பயணமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாமிலுள்ள இன்னும் பல புகலிடக்கோரிக்கையாளர்கள் அமெரிக்க அதிகாரிகளால் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், இவர்களில் எத்தனைபேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவார்கள் என்ற விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

Share This: