நந்திக்கடல் கோட்பாடுகளும் 2017ம் ஆண்டின் வாக்கெடுப்புகளும்.

0
3007

அண்மையில், தெற்கு குர்டிஸ்டானிலும் கத்தலோனியாவிலும் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இவை, தமிழிறைமையை இழந்த ஈழத்தமிழர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறத்தில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் வலைகளுக்குள் சிக்காமல், விடுதலைப் போராட்டத்தை நகர்த்த வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. ஆதலால், பூகோள அரசியலுக்குள் சிக்காமல், விடுதலைப் போராட்டத்தின் கொள்கையைத் தூய்மையாக வைத்திருப்பதற்குப் போராடும் இனங்கள், நந்திக்கடல் சொல்லும் பாடத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பூகோள அரசியலும், வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலும்

பாரிய யுத்தங்கள் நடைபெறுகின்ற பொழுது, அதற்கான இராணுவத் தளபாடங்களும், இராணுவத்திற்குத் தேவைப்படுகின்ற வளங்களும், கடல்வழியூடாக விநியோகிக்கப்படுகின்றன. இச்சூழ்நிலையில், துறைமுகங்களும், சில நிலப்பரப்புகளின் அமைவிடங்களும், சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் நலன்களின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பூகோள முக்கியத்துவம் பெறுகின்ற இப் பிரதேசங்களில், விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகின்ற பொழுது, அங்கு போராடும் மக்கள் இவ்வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழாமல் இருப்பதினூடாக, தங்களின் போராட்டக் கொள்கையை தூய்மையாக வைத்திருக்க முடியும். இதுவே, நந்திக்கடலில் முன்வைக்கப்பட்ட கோற்பாடு ஆகும்.

கத்தலோனியாவும் தெற்கு குர்டிஸ்தானும்
IMG_20171023_214709

கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, கத்தலோனிய மக்கள் தங்களின் அபிலாசைகளை ஒரு வாக்கெடுப்பினூடாக வெளிப்படுத்தியுள்ளனர். அம்மக்களின் போராட்ட வேட்கையை கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும், கத்தலோனியா பூகோள அரசியலுக்குள் சிக்குண்டு இருப்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரங்களில் மோதல்கள் வெடிப்பதற்கான அபாயங்கள் இருப்பதால், கத்தலோனியா „NATO“ நாடுகளின் நலன்களின் அடிப்படையில், பூகோள முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், கத்தலோனியாவிலுள்ள „Barcelona“ மற்றும் „Tarragona“ துறைமுகங்கள், இந்திய மற்றும் பசிபிக் சமுத்திரங்களுக்கான வளங்கள்களுக்கும், பெரும்பாலான „NATO “ நாடுகளின் இருப்பிடமான ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்புக்கும், தேவைப்படுகின்றன.(1)

இத்தருணத்தில், தெரிந்தோ தெரியாமலோ „Tarragona“ துரைமுகத்துக்கு அமெரிக்கப் போர்க்கப்பல்களின் வருகையை அதிகரிக்க, கத்தலோனியாவின் தரப்பிலிருந்து விருப்பம் தெரிவிக்கப்படுகிறது.(2)இம்முடிவினூடாக, கத்தலோனியத் தலைமைகள் மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குற் சென்றால், அது போராடும் வேறு இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் நடவடிக்கையாகும்.

அத்தோடு, வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் நிற்பது, ஒரு விடுதலைப் போராட்டதுக்கு ஆபத்துகளைக் கொண்டு வரும் என்பதை தெற்கு குர்டிஸ்ன்தானின் வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளது.
IMG_20171023_214702

இராக் யுத்தத்தின் பொழுது, அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்கிய தெற்குக் குர்டிஸ்தான் தலைமை, தன்னாட்சி உரிமையைப் பெற்றிருந்தது.(3)(4) ஆனால், அதே தலைமை, சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை நடாத்திய பொழுது, அது தனது நட்பு நாடுகளாக கருதிய நாடுகளே, இவ்வாக்கெடுப்புக்குக் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தின.(5)(6)ஆதலால், வல்லாதிக்க சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் நிற்பது, ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆபத்தாக அமையும் என்பதற்கு, தெற்குக் குர்டிஸ்தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. அத்துடன் இவ்வாக்கெடுப்புக்குப் பின், தெற்குக் குர்டிஸ்தானில் மோதல்கள் நடைபெற்று, பல பிரதேசங்கள் குர்டிஸ் மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.(7)

நந்திக்கடல் சொல்லும் பாடம்
IMG_20171023_214655

பனிப்போர் முடிந்த பின் நிலவும் போராட்டங்கள் தொடர்பான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அப் போராட்ட அமைப்புகளுக்குக் கிடைக்கும் ஆதரவு, மற்றும் உதவி தொடர்பாகவும் அவ்வாய்வில் முக்கியத்துவம் செலுத்தப்பட்டுள்ளது. இதனில், தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு நாட்டின் அனுசரணையில்லாமல் இயங்குகினர் என்பது கண்டறியப்பட்டது.(8) அதனால் தான், எவ்வித நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் தமிழீழ விடுதலைப் போராட்டம் செல்லாமல், தமிழரின் தாயகத்தில் தமிழிறைமை நிலைநாட்டப்பட்டிருந்தது.

இந்தத் தமிழிறைமையின் காரணமாகவே தமிழினவழிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, தமிழர்களின் தாயகத்தில் எந்தவொரு நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லாமல் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. இவ்வாட்சி, சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் பூகோள நலன்களைப் பாதித்ததால், தமிழிறைமை அழிக்கப்பட வேண்டிய தேவை இந்நாடுகளுக்கு ஏற்பட்டது. இதன்படி, இலங்கை அரசு பலப்படுத்தப்பட்டு, 2009ம் ஆண்டு தமிழர்கள் ஒரு சிறுகிய வட்டத்திற்குள் முடக்கப்பட்டனர். யுத்தப் பிரதேசத்தில் முடக்கப்பட்ட தமிழர்களின் அவல நிலையை, ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, தமிழீழத்தின் தலைமையை சரணாகதியடைய வைத்து, திருகோணமலைத் துறைமுகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் முயற்சி ஒன்றும் நடைபெற்றது.(9)

இந்நடவாடிக்கைக்குத் தமிழீழத்தின் தலைமை சம்மதித்திருந்தால், தமிழிறைமைக்கான கொள்கை அழிக்கப்பட்டு, திருகோணமலையில் வல்லாதிக்க சக்தியின் ஒரு இருப்பிடம் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, மத்திய கிழக்கின் மீதான படையெடுப்புகளுக்கான அனுசரணைகள், இவ்விருப்பிடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும். இதனாலேயே, தமிழீழத்தின் தலைமை இத்திட்டத்தை நிராகரித்து, நந்திக்கடலில் தமிழிறைமையை விட்டுக்கொடுக்காமலும், தமிழீழத்திலிருந்து எந்தவொரு அந்நிய சக்தியும் வேறு இனங்களை அடக்கமுடியாத படியும், இறுதிவரை போராடியது.

தமிழீழத்துக்கான விடுதலைப் போராட்டமோ, அல்லது வேறு ஒரு தேசிய விடுதலைப் போராட்டமோ, நந்திக்கடலில் முழங்கிய இக்கோட்பாடுகளின் அடிப்படையிலே மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இக்கோட்பாடுகளுக்கு எதிராகவே, தாயகத்தில், தமிழகத்தில் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உள்ள தலைமைகள் செயற்பட்டுக்கொண்டு, வேறு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுந்து விட்டனர். இது போதாது என்று, அண்மைக் காலமாக திருகோணமலையில் அமெரிக்க இராணுவத்தின் பிரவேசம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றமையும், குறிப்பிடத்தக்கதாகும்.(10)(11)

இத் தலைமைகள் திருந்தாத பட்சத்தில், நந்திக்கடல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு புதிய தலைமுறை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.

(1) http://cimsec.org/naval-logistics-mediterranean-corridor-pivot-pacific/18528

(2) http://www.catalannews.com/business/item/tarragonas-port-increased-its-activity-by-42-in-2012

(3) http://www.gov.krd/p/p.aspx?l=12&s=020000&r=300&p=210

(4) http://www.khaama.com/kurdish-peshmerga-can-be-a-game-changer-in-iraq-and-syria-6802

(5) http://www.aljazeera.com/news/2017/09/erdogan-warns-armed-action-iraqi-kurdistan-vote-170925142445627.html

(6) http://www.presstv.com/Detail/2017/09/26/536491/US-disappointed-Iraq-Kurdistan-referendum

(7) http://abcnews.go.com/International/wireStory/iraq-losing-kirkuk-kurdish-forces-pull-sinjar-50526318

(8) https://www.rand.org/content/dam/rand/pubs/monograph_reports/2007/MR1405.pdf ; P. 114

(9) http://dbsjeyaraj.com/dbsj/archives/11643

(10) http://www.colombopage.com/archive_17B/Oct02_1506926729CH.php

(11) http://www.cpf.navy.mil/news.aspx/110381

-பரணி (Parani Krishnarajani)

Share This: