பிரபாகரனின் சொந்த ஊரை நோக்கி அணியணியாக திரண்ட மக்கள் (Videos)

0
3331

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் வல்வை இந்திரவிழா வெகு விமரிசையாக நேற்று 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை நோக்கி தமிழர் தாயகமே திரண்டிருந்தது. அட தமிழர் தாயகத்தில் இவ்வளவு மக்கள் இருக்கின்றார்களா என வியக்க வைக்கும் அளவுக்கு மக்கள் அணியணியாக வல்வையில் திரண்டிருந்தார்கள்.

ஒரே நேரத்தில் 10 இசைக் கச்சேரிகள், பரத நாட்டியங்கள், வண்ண வண்ண மின்னலரங்காரங்கள், சிறார்களைக் கவரும் பலவகையான உருவங்கள், இராட்சத புகைக்கூண்டுகள் என வல்வை நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

தொங்குபாலத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியும் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரை வீதிகளெங்கும் பல்வேறு மின்னலரங்காரங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

சின்னம் சிறார்களே வண்ண வண்ண புகைக்கூண்டுகளை வானில் ஏவும் திறமைகளை பெற்றிருத்தமையை கண்டு பார்வையாளர்கள் வியப்பில் மூழ்கினர்.

ஆங்காங்கே வந்த மக்களின் தாகம் தீர்க்க சர்பத், கோப்பி, தேநீர் என்பன வல்வை மக்களால் அன்புடன் பரிமாறப்பட்டு இருந்தன.

கிட்டத்தட்ட வல்வையிலுள்ள கோவில் சார்ந்த அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், மீனவ அமைப்புக்கள் என அனைத்து அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்திரவிழாவுக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நிகழ்வுக்கு வந்த பார்வையாளர்கள் எதை பார்ப்பது எதை விடுவது எனத் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பிரபாகரனின் வீட்டுக்கு அண்மையில் இருந்த எம்.ஜி.ஆர் சதுக்கமும் மின்னொளியால் ஜொலித்தது. எம்.ஜி.ஆருடன் எங்கள் இளைஞர்கள் செல்பி எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டினர்.

அன்னைபூரணி பாய்மரக் கப்பல் தொடர்பிலான வரலாறும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

சக்சாபோன் கலைஞர்கள் தவில் கலைஞர்களுடன் இணைந்து நடாத்திய இசைக்கச்சேரி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இந்திரவிழா நிகழ்வுகளை இரவு 12 மணியையும் தாண்டி குடும்பம் குடும்பமாக மக்கள் தங்கியிருந்து பார்த்து இரசித்தமை குறிப்பிடத்தக்கது.

வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறை என்பார்கள். தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பல்வேறு தளபதிகள், போராளிகளை உருவாக்கிய மண் என்பதால் அது சர்வதேச ரீதியாகவே இன்னமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

வல்வெட்டித்துறை மக்களின் ஒற்றுமைக்கும், ஒன்றிணைவுக்கும் இத்தகைய விழாக்களின் பிரமாண்ட வெற்றியே சாட்சி.

வல்வை மண்ணில் வருடாந்தம் பட்டத்திருவிழாவும், இந்திரவிழாவும் மிகப் பிரமாண்டமாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This: