ஒப்பரேசன் லிபரேசனில் இறந்தோருக்கு வடமராட்சியில் அஞ்சலி!

0
537

1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்ற ஒப்பரேசன்  லிபரேசன் இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி, திக்கம் கலாசார மண்டபத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் இராணுவம் வடமராட்சியை மீட்க ஒப்பரேஷன் லிபரேசன் என்ற பெயரில் படை நடவடிக்கையை மேற்கொண்டது. நெல்லியடி மகாவித்தியாலயத்தில் பெரும் இராணுவ முகாமை அமைத்து அங்கிருந்து படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையால்  1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி, அல்வாய், மாலு சந்தி, திக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இராணுவம் மேற்கொண்ட ஷெல் வீச்சுத் தாக்குதலில் பலர் படுகொலைசெய்யப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அந்தச் சம்பவம் நடந்தேறி நேற்று 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூர்ந்து நேற்று அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. 29.05.1987ஆம் ஆண்டு அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சம் புகுந்தவேளை இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்வாய்க் கிராம மக்கள் அந்தக் கிராமத்தவர்களால் நினைவுகூரப்பட்டனர். திக்கம் கிராமத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களை திக்கம் கிராம மக்கள் நேற்று அஞ்சலித்தனர்.

Share This: