இறுதிக்கட்ட ஈழப்போரின்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள 20,000க்கும் மேற்பட்டத் தமிழர்களின் நிலை என்ன? – சீமான் கேள்வி

0
406

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள 20,000க்கும் மேற்பட்டத் தமிழர்களின் நிலைகுறித்தறிய இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்
– சீமான் வலியுறுத்தல்

சிங்களப் பேரினவாத இலங்கை அரசானது தமிழர்களை முற்றும் முழுதாக அழித்தொழித்து மொத்த நிலத்தையும் சிங்களமயமாக்கும் நோக்குடன் திட்டமிட்ட ஒரு உள்நாட்டுப்போரை நடத்தி 2 இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது. இவ்வாறாக இந்நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையை நடத்தித் தமிழர்களை அழித்து முடித்தபோதிலும் அதன் இன அழிப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது.

தமிழர்களைக் கொன்றொழித்து சிங்கள ஆக்கிரமிப்பைத் தமிழர் தாய் நிலங்களில் செய்துவருகிற அதேவேளையில் தமிழர்களைக் காணாமல் போகச் செய்யும் வேளைகளிலும் ஈடுபட்டுவருகிறது இலங்கை அரசாங்கம். இதுவரை 20,000க்கும் மேற்பட்டத் தமிழர்கள் இலங்கையின் முப்படையினராலும், அவர்களுடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களாலும் காணாமலாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. உண்மையில், இந்த எண்ணிக்கையைவிட பல மடங்கு தமிழர்கள் காணாமல் போயிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தமிழ் மக்களைத் தொடர்ச்சியாக அச்சப்போக்குடனேயே வைத்திருக்கச் செய்கிற உளவியலை உருவாக்கும் நோக்கோடே இலங்கை அரசப்பயங்கரவாத அரசு, தமிழர்களைக் காணாமல் போகச் செய்கிறது. சிங்களப்பேரினவாத அரசு செய்துவரும் இக்கொடும் நடவடிக்கைகளை ஐ.நா.பெருமன்றமும் உறுதிசெய்துள்ளது. உலகில் காணாமல்போனோரின் எண்ணிக்கையில் இலங்கை இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது என்பதன் மூலம் சிங்களப் பேரினவாத அரசின் கோர முகத்தை அறிந்துகொள்ளலாம்.

2009ல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது சர்வதேசப் போர்விதிமுறைகளின்படி முறையாக இலங்கை அரசிடம் சரணடைந்த போராளிகளும், பொதுமக்களும் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து இதுவரை எந்தத் தகவலுமில்லை. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள், பொதுமக்கள் பலர் கடத்தப்பட்டு காணாமல் போனதும் தெரிய வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்ற இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘காணாமல் போனவர்கள் அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்’ என்று தெரிவித்து அதிர்ச்சியினைத் தந்தார். அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கமானது 5,000க்கும் மேற்பட்ட சிங்களப் பொதுமக்களும், இலங்கை இராணுவத்தினரும் காணாமல் போனதாக ஒரு கருத்துருவாக்கத்தைத் திட்டமிட்டுப் பரப்பிவருகிறது. இதன்மூலம் காணாமல் போனோர் பிரச்சினையைத் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்குமானப் பொதுவான பிரச்சினையென சமநிலைப்படுத்த முனையும் சதிச்செயல் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும் அளித்துத் தமிழர்களைக் கொன்றுகுவித்தப் பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்ற உலக நாடுகளின் உதவியோடு இலங்கைப் பேரினவாத அரசாங்கம், தமிழர்களைத் திட்டமிட்டு அழித்தொழித்து, பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்கிற பெயரில் நஞ்சுக்குண்டுகளைப் போட்டுத் துள்ளத் துடிக்கக் கொலைசெய்த மனிதப் பேரவலத்தை அரங்கேற்றியபோது வாய்மூடி மௌனியாக நின்ற ஐ.நா.பெருமன்றம் இன்றைக்கும் தமிழர்களுக்கு என்ன நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறது? தமிழ்த்தேசிய இன மக்களின் காப்பரண்களாகவும், தமிழர்களின் இராணுவப்படைப் பிரிவாகவும் விளங்கி நின்ற விடுதலைப்புலிகள் மீது பொய்யானக் குற்றக்சாட்டுகளைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்களை அழித்துவிட்டால் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் எனப் பேசித் திரிந்தவர்கள் ஈழ நிலத்தில் தமிழர்களுக்கு எத்தகைய நிம்மதியைக் கொடுத்திருக்கிறார்கள்.? இன்றுவரை நிலமற்று, வீடற்று சொந்த மண்ணிலே அகதியாகத் தங்களது வாழ்க்கையினை நடத்திக் கொண்டிருக்கிறத் தமிழர்களுக்கு என்ன நியாயம் செய்திருக்கிறார்கள்.? இவ்வாறு எல்லாவற்றையும் மறைத்து இலட்சம் மக்களைக் கொன்றுகுவித்த பாரிய இனப்படுகொலையினைத் துளியும் நெருடலோ, குற்ற உணர்வோ, அறவுணர்ச்சியோயின்றி கடந்துபோகிற கொடூர மனநிலையை இயல்பாய் உருவாக்க முயல்வதை எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?

ஆகையினால், ஒரு இனப்படுகொலையைச் சந்தித்து மிகப்பெரும் பேரழிவுக்கு ஆட்பட்டு நிற்கிற எமது ஈழத்தமிழ் சொந்தங்கள் இனியும் ஒற்றை இலங்கைக்குள், ஒருங்கிணைந்த ஆட்சிக்குள் சிங்களர்களோடு இணைந்து ஒன்றுபட்டு வாழ்வது சாத்தியமில்லை என்பதுதான் அம்மண்ணில் இருக்கிற புறச்சூழலாகும். ஆகவே, அம்மண்ணில் வாழும் தமிழர்களிடத்திலும், புலம்பெயர்ந்து இருக்கிற ஈழத்தமிழ் சொந்தங்களிடத்திலும் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனத் தமிழ்த்தேசிய மக்களின் சார்பாக மீண்டும் ஒருமுறை சர்வதேசச் சமூகத்திற்கு கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள 20,000க்கும் மேற்பட்டத் தமிழர்களின் நிலை என்னாவானது என்பது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டியதும், அதற்கு முழுபொருட்பேற்க வேண்டியதும் இலங்கை அரசின் தலையாயக் கடமையாகும். எனவே, தங்களது உறவுகள் திரும்ப வருவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறத் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசானது இந்திய அரசிடம் முறையிட்டு, அதன்மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், சர்வதேசச் சமூகமும், ஐ.நா.பெருமன்றமும் இவ்விவகாரத்தில் இலங்கை அரசிற்கு நெருக்கடியினைத் தந்து உரியத் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

என சீமான் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

Share This: