ஏழு தமிழரையும் நெருங்கி வந்த விடுதலை! பரபரப்பாகின்றன ஈழமும் தமிழ் நாடும்!!

0
446

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் நளினி உள்ளிட்ட ஏனைய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.

இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மாத்திரமன்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரொபேர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இதனிடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் தம்மை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்ததது.

இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு 2 கடிதங்களை அனுப்பிய போதிலும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில்? 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது சிறையில் உள்ள கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபேர்ட், பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக தமிழகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி கடிதம் எழுதிய கடிதத்தில், ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறியிருந்தது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை முன்வைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்துள்ளது.

அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி: IBC தமிழ்

Share This: