‘ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!’ – ஆனந்தக் கண்ணீரில் ஈழத் தம்பதி

0
869

ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி – விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நீங்க கர்பமாக இருக்கீங்க’ என்ற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.
1_16325

அதுமட்டுமல்லாமல்,‘ஸ்கேன் செஞ்சு பார்த்ததில்,” உங்களுக்கு வயிற்றுல 3 குழந்தைகள் இருக்கு’ என மருத்துவர்கள் சொல்ல, தம்பதியர் துள்ளிக்குதித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, தொடர்ந்து அறச்சலூர் அரசு மருத்துவமனையிலேயே முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், கலானியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அவருடைய கணவரும், உறவினர்களும் சேர்த்திருக்கின்றனர். ஒருவாரமாக சிகிச்சையில் இருந்த கலானிக்கு, திடீரென இன்று காலை பிரசவ வலியெடுக்க, மருத்துவர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே, ஸ்கேன் ரிப்போர்ட்டில் 3 குழந்தைகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்ததால், தாயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டி மருத்துவர்கள் ஆபரேஷன் செய்திருக்கின்றனர். அப்போதுதான் மருத்துவர்களே வியந்துபோன அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.
4_16130

ஸ்கேன் ரிப்போர்ட்டில் 3 குழந்தைகள் என்று இருக்க, நான்காவதாக ஒரு குழந்தை வயிற்றில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதைக் கண்ட மருத்துவர்கள் அதிசயித்துப்போயிருக்கின்றனர். அதன்பிறகு, சரியாக மதியம் 12.30 மணியளவில் நான்கு குழந்தைகளையும் ஆபரேஷேன் செய்து வெளியே எடுத்திருக்கின்றனர். பிறந்த 4 குழந்தைகளையும் மருத்துவர்கள் கையில் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தபோது, கலானியின் கணவர் மற்றும் உறவினர்கள் அனைவருமே சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மேலும், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருக்கின்ற செய்தி மருத்துவமனை முழுக்க பரவ, எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்.
2_16345

இது சம்பந்தமாக கலானியின் கணவர் விஜயகுமாரிடம் பேசினோம். “30 வருஷத்துக்கு முன்னாடி இலங்கையில இருந்து உயிருக்குப் பயந்து தப்பிச்சு வந்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தன். நான் அப்போ சின்னப் பிள்ளையாக இருந்தாலும், அங்கிருந்து அகதியா தமிழகத்துக்கு வந்தது இன்னும் கஷ்டமா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகி மூன்றரை வருஷமாகியும் குழந்தை பிறக்கவே இல்லை. ‘ஏன் உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை’ன்னு பலரும் கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாம பல நாள் மனசுக்குள்ளயே கண்ணீர் விட்டிருக்கேன். அந்தக் கடவுள் என்னைக்கு இருந்தாலும் எனக்கு நிச்சயமாக குழந்தையைக் கொடுப்பார்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அந்த நம்பிக்கை இன்னைக்கு வீண் போகலை. இத்தனை வருஷம் காத்திருந்ததுக்காக இன்னைக்கு எனக்கு 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை என மொத்தம் 4 குழந்தையை ஆண்டவன் கொடுத்திருக்கான். நான் தமிழ்நாட்டுக்கு அகதியா வந்து, ஒரு பெயின்டரா வேலைபார்த்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா, என்னோட 4 குழந்தைகளும் என்ன மாதிரி கஷ்டப்படக் கூடாது. நல்லபடியா என் குழந்தைகளை வளர்ப்பேன்” என முடித்தவரின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.

இது சம்பந்தமாக மருத்துவர்கள் கூறுகையில், “ஸ்கேன் ரிப்போர்ட்டுல 3 குழந்தைகள்தான் தெரிஞ்சது. ஒருவேளை குழந்தை வயிற்றுல திரும்பியிருந்ததால ஸ்கேன்ல தெரியாம இருந்திருக்கும். மற்றபடி, சுகப்பிரசவத்துக்கு சாத்தியம் இல்லாததால சிசேரியன் செஞ்சி இப்போ அம்மாவும், 4 குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. நோய்த் தொற்று ஏற்படாத வகையில் 4 குழந்தைகளும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் வரைதான் பிறந்திருக்கிறது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை” என்று நெகிழ்ந்து போனார்கள்.

Share This: