`வீட்டு ஓனரைக்கூட 15 வருஷமாகப் பார்க்கவில்லை’ – சர்ச்சையான ஃபேஸ்புக் பதிவுக்குச் சீமான் தரப்பு விளக்கம்.

0
388

முதியவரின் வீட்டை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிடியிலிருந்து முதியவரின் சொத்து மீட்கப்பட்டுள்ளது என வழக்கறிஞர் ஒருவரின் ஃபேஸ்புக் பதிவு வைரலானது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், “சென்னை சாலிகிராமம் பகுதியில் 19 ஆண்டுக்காலமாக ஒரு முதியவரின் வீட்டில் வாடகை கொடுக்காமல் தங்கியிருந்தார் சீமான். இத்தனை ஆண்டுக்காலமாக 45,00,000-க்கும் மேல் வாடகை பாக்கி உள்ளது. பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல். ஒருவழியாக இன்று என்னால் அதற்குத் தீர்வு கிடைத்தது என நினைக்கும்போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். 

இத்தனைக்கும் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல. உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டுச் சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குநராகத் தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தைவிட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார். இன்று இதுவரை தான் செய்த தவற்றை உணர்ந்து, மனந்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான்” என பல்வேறு குற்றச்சாட்டுகள் சீமான் மீது அடுக்கியிருந்தார் வழக்கறிஞர் கோபு. ஆனால், அந்தப் பதிவை சில மணி நேரத்திலேயே நீக்கிவிட்டார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து சீமான் தரப்பினரிடம் பேசினோம். 

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அவர், “15 வருஷத்துக்கு முன்னாடி குடியிருந்த வீடுதான் அது. ரவிச்சந்திரன் என்பவர்தான் 19 வருஷத்துக்கு முன்னாடி அந்த வீட்டில் இருந்தார். அவர் பெயரில்தான் அக்ரிமென்ட் இருக்கிறது. இயக்குநராக இருக்கும்போது ரவிச்சந்திரன் கூட சீமான் தங்கியிருந்தார். ஆனால், 15 வருஷத்துக்கு முன்னாடியே அந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு மூன்று வீடுகள் மாறிவிட்டார். ரவிச்சந்திரன்கூட தங்கியிருந்தால் சீமான் பெயரையும் இந்த வழக்கில் இணைத்துள்ளார்கள். வழக்கு குறித்த ஆவணங்களைகூட அந்தப் பழைய முகவரிக்கே அனுப்பியுள்ளனர். இதனால் வழக்கு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாமல் போய்விட்டது. சீமான் வீட்டுச் சாவியை ஒப்படைத்தார் என அந்தப் பதிவு அனைத்தும் முழுக்க முழுக்க பொய். அந்த வீட்டு ஓனரைக்கூட 15 வருஷமாகப் பார்க்கவில்லை. வீட்டு ஓனருக்கும் ரவிச்சந்திரனுக்கும்தான் பிரச்னை. சீமான் சாவியை ஒப்படைத்தார் எனச் சொல்கிறார்களே, அவர் யாரிடம் ஒப்படைத்தார், எப்போது ஒப்படைத்தார் என்பதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா?” என விளக்கம் அளித்தார். 

– விகடன்

Share This: