கடவுள் வந்தார் (தலைவர் பிறந்தநாள் சிறப்பு சிறுகதை)

0
421

உலகளவிலான தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஒருசேர அங்கே குழுமியிருந்தனர்.அனைவரிடமும் ஒருவித இனம் புரியாத பரபரப்பும் பரவசமும் தொக்கி நின்றிருந்தது. எல்லோரும் அந்த அறையில் இருந்த மாபெரும் கணினித் திரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பரபரப்போடு உள்ளே நுழைந்தார் எல்லீஸ்.
“என்ன நல்ல செய்தி உண்டா..?!!”

கேள்வியோடு வந்தவரைப் பார்த்த தமிழர்நாட்டு தொல்லியற் துறை பொறுப்பாளர் கரிகாலன் மெல்லிய புன்னகையோடு அவரை வரவேற்றார்.

“விரைவில்…! ” மீண்டும் கணினித் திரையில் நிலைகுத்தி நின்றது கரிகாலனின் கண்கள்.

ஒருமுறை பெருமூச்செறிந்துவிட்டு “ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் வரலாறு வெளிப்படப் போகிறது…! நாம்தான் அவரை இப்போதுள்ள உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம் என்கிறபோதே மெய் சிலிர்க்கிறது…! ” எல்லீஸ் பெருமிதப்பட்டுக் கொண்டார்.

மெல்லிய சிரிப்போடு அவரைப் பார்த்த கரிகாலன்
“உங்களுக்கு ஒன்று தெரியுமா எல்லீஸ். அவர் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்த பெரும்பான்மை எம் மூதாதையர்களுக்கு அவரின் அருமை புரியவில்லை போலும். ஏனென்றால் இப்போது நாங்கள் வழிபடும் கடவுள் என்று சொல்லப்படுகிற அவரைப்பற்றிய துல்லியமான தரவுகள் இல்லை. ஆனால் அதன் பின்பாக என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு ஒரு பிரமாண்ட சிலை வடித்து வைத்தார்கள் என்று எங்கள் இன மக்களுக்குள் ஒரு கதை உண்டு. அப்போது உலகம் முழுமைக்கும் பதின்மூன்று கோடிப் பேர் வாழ்ந்திருக்கலாம் என்று தரவுகள் அனுமானிக்கிறது. ஆனாலும் அவர்கள் ஏதோ சில காரணங்களால் ஒன்று சேராமல் பிரிந்திருக்கிறார்கள். அவர் காலத்திற்குப் பிறகு இருநூறு ஆண்டுகளில் எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த பகுதி மூன்று முறை ஆழிப் பேரலைகளால் தாக்கப்பட்டு கடல் கொண்டு விட்டது.அதன் பிறகு எஞ்சியவர்கள்தான் இப்போதைய உலகின் மூன்றில் இருபங்கு நிலப்பரப்புகளில் பெரும்பான்மையாக மாறி வாழ்கிறார்கள்.ஆளுமைகளாகவும் இருக்கிறார்கள்.அவர்கள் கொட்டிக்கொடுத்த பணத்தில்தான் இந்த ஆய்வுப் பணிகளே தொடர்கிறது.”

“உண்மைதான் கரிகாலன். உங்கள் இன மக்கள் அக்காலகட்டத்தில் தமிழ் மொழியின் ஆளுமை பற்றியோ அவரின் வீரத்தைப் பற்றியோ கவலைப்படாதவர்களாய்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் பின்னாட்களில் விரைவாக மாறியிருக்கிறார்கள். இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் தமிழ் மொழியோடு ஆங்கிலமும் பேசி வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது.” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டார் எல்லீஸ்.

அப்போது அறையிலிருந்த ஒலிப்பான் பேரிரைச்சலோடு ஒலித்தது. கரிகாலனும் எல்லீசும் மகிழ்ந்து ஒருவாரையொருவர் அணைத்துக்கொண்டனர்.

“எல்லீஸ் நாம் நெருங்கி விட்டோம். இன்னும் ஐம்பது அடியில் பல நூற்றாண்டுகால வரலாற்றை பார்க்கப் போகிறோம்.” கரிகாலன் கண்களில் நீர் வழிந்தோடியது.

எல்லீஸ் கணினித் திரையின் அருகில் சென்று நின்று பார்க்கிறார்.பிரமிக்கிறார்.
“கரிகாலன்…! நூறு அடிச் சிலை…! பொய் அல்ல, உண்மைதான்…!”

எல்லோரும் வாய் பிளந்தபடி நின்றிருக்கிறார்கள். கரிகாலன் மேல்தளத்திற்கு ஓடுகிறார். எல்லீசும் பின் தொடர்ந்து ஓடுகிறார். இருவரும் கீழே பார்க்கிறார்கள் கடல் ஆர்பரித்துக்கொண்டிருக்கிறது. அங்கே கைநீட்டியபடி கரிகாலன் சொல்கிறார்.

“எல்லீஸ்! இதோ இங்குதான் எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். உருவம் தெரியாத பெயர் தெரியாத எங்கள் கடவுளும் இருக்கிறார்.” சிரிப்பும் அழுகையும் ஒரு சேர ஆக்ரமித்திருந்தது கரிகாலனிடம்.

அவரின் தோளில் ஆறுதலாக கைவைத்து “கரிகாலன் இன்னும் சில மணி நேரங்களில் உங்கள் கடவுளின் உருவமும், பெயரும் இந்த உலகிற்கு வெளிப்படப் போகிறது. அமைதியடையுங்கள்” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டினார் எல்லீஸ்.

அதோ இராட்சத இயந்திரங்கள் மேலே இழுக்கிறது. பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து சுமந்து கொண்டிருந்த ஒரு இனத்தின் வரலாறு கடலன்னையின் கருப்பையிலிருந்து வெளிவரப் போகிறது…!

உலகமே வியந்து எதிர் நோக்கியிருந்த வரலாற்று மாவீரன், தமிழர்கள் வழிபட்டு வந்த இறைவன் வெளிபடப் போகிறார். உலகக் கண்களெல்லாம் தத்தமது வீடுகளிலிருந்த தொலைக்காட்சி பெருந்திரையையே பார்த்துக்கொண்டிருக்க செய்தி அலைவரிசைகளில் தமிழோடு மூன்றாம் ஊழிக்காலத்துக்குப் பின் உயிரோடு இருந்த அத்துனை மொழிகளிலும் செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடல்நடுவே ஆழிப்பேரலையொன்று மேலெழும்ப அதோ தமிழர்களின் கடவுள் நூறடிச் சிலை புதிதாய் பிரசவமாகி வெளியே வருகிறது. கரிகாலன் எல்லீஸ் உட்பட அப்பணியிலிருந்த அத்துனை தொல்லியல் துறை ஆய்வறிஞர்களும் வாய் பிளந்தபடி அந்நாந்து பார்க்க முழு உருவச் சிலையும் வெளியே வந்தது.

துறைமுகக் கரையில் உலக நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் அத்துனை தமிழர்களும் மனிதக் கடலாய் கைகளில் மலர்களை வைத்துக்கொண்டு தங்கள் இறைவனை வரவேற்க ஆர்ப்பரித்து நின்றிருந்தார்கள். இதோ அவர்கள் கடவுளின் சிலை கரைக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.

கரிகாலன், எல்லீஸ் இருவரும் மெய் சிலிர்க்க உதடுகள் நடுங்க சென்று சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளில் படிந்திருந்த கடற்பாசியை சுத்தம் செய்தனர்.

கரிகாலன் வாசித்தார்

‘தமிழ்த்தேசிய இனத்தின் தலைவர்
மேதகு வே.பிரபாகரன்’ என்று எழுதப்பட்டிருந்தது.

– Ara Siva

Share This: