2018ம் ஆண்டின் விடுதலைப் புலிகள் என்பவர்கள் யார்?

0
571

கடந்த 27.11.2018 அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணமிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர், திடிறென இவ்வமைப்பின் பெயரிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டமையும், அதில் கூறப்பட்ட கருத்துக்களும் ஊடகங்களின் மத்தியில் சர்ச்சைக்குரியனவாகவே வலம் வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்னராக, தமிழீழத் தேசியத் தலைவர், மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வழங்கப்பட்ட 2008ம் ஆண்டின் மாவீரர் நாள் உரையிலிருந்து, சில அரசியற் கருத்துகளும் இவ்வறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தனடிப்படையில், இப்புதிய அறிக்கையின் நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் அறிவதற்கு, நாம் தேசியத் தலைவரின் 2008ம் ஆண்டின் மாவீரர் நாள் உரையினை 2018ம் ஆண்டின் அறிக்கையுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

2 ஆவணங்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமைகளை ஆராய்வதை விட, 2018ம் ஆண்டின் அறிக்கையிலுள்ள சர்ச்சைக்குரிய விடயத்தினைப் பார்த்தாக வேண்டும். ஏனெனில் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

2018 ஆண்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்திருப்பது:

„… 2008ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் „என்றென்றும் தமிழீழம் இந்தியாவின் நட்பு நாடாகவே விளங்கும்“ என்று கூறியதையும் எமது இந்திய சார்புநிலை உறுதிப்பாட்டையும் இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.“

WhatsApp-Image-2018-11-28-at-20.25.20-1024x623

2018ம் ஆண்டின் அறிக்கை

WhatsApp-Image-2018-11-28-at-20.25.26-e1543603033264-1024x317
2018ம் ஆண்டின் அறிக்கை

ஆனால் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிட்டது என்னவெனில்:

„எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நடப்புறவுப் பாலத்தை வளர்த்திடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்துநிற்கிறோம்.
(…)
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச்சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நடப்புச்சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.“

2008ம் ஆண்டில் தமிழீழத் தேசியத் தலைவர் இந்தியாவுடன் நட்புறவையே வளர்க்க விரும்புவதாகத் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களே இந்தியாவை ஒரு நட்புச் சக்தியாக கருதுகின்றனர் என்று தெரிவிக்கின்றார்.அதுவும் 2009 அவலங்கள் நிகழும் முன்னரே, இந்தியா தமிழர்களுக்கு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று மக்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் 2018ம் ஆண்டின் அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று பிழையாக சித்தரிக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டம் திசைதிருப்ப எத்தனிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், 2009ம் ஆண்டில் சர்வதேசக் கூட்டுச்சதியினால் நிகழ்த்தப்பட்ட தமிழினவழிப்பின் பின்புலத்திலும், ஈழத்தில் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் பின்புலத்திலும் இந்திய அரசின் பங்கினை மூடிமறைக்கும் முயற்சியாக இவ்வறிக்கை நிகழுமோ எனும் கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி, 10 ஆண்டுகளுக்கு முன்னராகப் பதியமிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டுக்கு மாறாக அமையும் இக்கருத்து, அவ்வமைப்பின் வெளியீடாக அமையுமா என்பதும், சந்தேகத்தினை எழுப்புகின்றது. அத்துடன் இவ்வறிக்கை சுவிஸ் நாட்டில் நடைபெற்ற மாவீரர்நாளில் ஒளிபரப்பப்பட்டுள்ளமையினால், சில கட்டமைப்புகள் இந்தியாவிடம் விலைப்போயுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெல்வது உறுதி

Share This: