`பதவி வந்தா என்ன?’ – வீடுவீடாக பால் பாக்கெட் போடும் திரிச்சூர் மேயர் அஜிதா

0
263

`உழைப்பு உயர்வைத் தரும்; பணிவைத் தரும்’ இந்த வாக்கியதுக்குச் சான்றாக வாழ்ந்து வருகிறார் மேயர் அஜிதா. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (CPI)  சேர்ந்த அஜிதா விஜயன், கடந்த புதன்கிழமை கேரள மாநிலம், திரிச்சூர் மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றார். மாவட்ட ஆட்சியர் அனுபமா முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.  அஜிதாவின் கணவரும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்தான். விஜயன் கடந்த 22 ஆண்டுகளாகத் திருநிலம் என்னும் பகுதியில் பால் பண்ணை வைத்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அஜிதாவும் தன் கணவரின் பால் வியாபாரத்தில் உதவி செய்தார். 
DuWk_yTUYAY-QY8_16235

கனிமங்களத்தில் வசித்துவரும் அஜிதா, கடந்த 18 ஆண்டுகளாக அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்று 200 வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்து வருகிறார். அங்கன்வாடி ஆசிரியராகவும் பணிபுரிகிறார். கடுமையான உழைப்பாளியான அஜிதாவுக்கு கனமங்கலம் மக்கள் அனைவரும் நெருங்கிய தோழர், தோழிகள். அந்த ஊர் மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கும் செல்லப்பெயர் ‘பால்கார மேயரம்மா’. அஜிதா மேயராகப் பதவியேற்பது இரண்டாவது முறை. அஜிதா முதல்முறை மேயராகப் பதவியேற்றபோது மாநகராட்சி அலுவலகத்துக்கு அரசு வாகனத்தில் வந்திறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அஜிதா தன் இருசக்கர வாகனத்தில்தான் வந்திறங்கினார். மறுநாள் அதிகாலை வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் பால் பாக்கெட்டுகளுடன் கிளம்பிவிட்டார். இதைப் பார்த்த மக்கள் ஆடிப்போனார்கள்.   

மக்களோடு மக்களாக வாழ்ந்துவரும் அஜிதாவுக்கு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் புரியும். குடிநீர் பிரச்னை, தெருவிளக்குப் பிரச்னை, சாலை வசதி என எல்லா பிரச்னைகளுக்கும் விரைவாகத் தீர்வு காண்பார். அஜிதாவுக்கு ஒரே மகள். சில மாதங்கள் முன்னர் தான் மகளுக்கு திருமணம் முடித்தார் அஜிதா. 
kk_16448

Mathrubhumi ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் `அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். 4.30 மணிக்கு பால் விநியோகம் செய்யப் புறப்பட்டுச் செல்வேன். 7.30 மணிக்கு வீடுதிரும்புவேன். அதன் பிறகு, வீட்டு வேலைகளை முடிப்பேன். பின்னர் மக்களைச் சந்திப்பேன். கறுப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பேன். பால் விநியோகிக்கச் செல்லும்போதே குடிநீர் வரவில்லை, இரவில் தெருவிளக்கு எரியவில்லை போன்ற பிரச்னைகளை மக்கள் சொல்லிவிடுவார்கள். கூடவே அரட்டையும் அடிப்பார்கள். தினமும் காலை இந்த உரையாடல்கள்தான் என் எனர்ஜி பூஸ்டர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அஜிதா அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஒரு முன்னோடி. 

நன்றி: ஆனந்த விகடன்

Share This: