புத்தருக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?

0
295

புத்தருக்கு எங்கள் மண்ணில் என்ன வேலை?

நினைவு தெரிந்த நாள்முதல்
நீராவியடி ஏத்தத்தில்
சிரித்தபடி இருக்கும்
பிள்ளையாரைப் பார்த்திருக்கிறேன்.
இன்று புதிதாக வந்து முளைத்திருக்கும் 
புத்தருக்கு அங்கு என்னவேலை?

சிங்களத்தின் அடையாளமாய்
இன்று எங்கள் நிலத்திசைகளெல்லாம்
புத்தரின் வந்திருப்பு
நாயாறு தாண்டி
கொக்குத்தொடுவாய்க்க்குப் போகையில்
நல்லருள் செய்யும்
விநாயகர் இருக்கிறார்-
இப்போ வில்லங்கமாய்
ஒரு புத்தருக்காய்
யாரழுதார்?

தமிழரெம் வாழ்விடத்தில்
தமிழரின் பண்பாடு 
தமிழரின் வழிபாடு
பல நூற்றாண்டிற்கு மேல்
பழந்தமிழ்க்கோட்பாடு
செழித்துவரும் சிறப்பிருக்க
திடுமென வந்து குந்தும்
புத்தருக்கு அங்கென்ன வேலை?

வடக்கும் கிழக்கும் இணையும்
வளமான மணலாற்றில்
தமிழீழ மத்தியாம்
இதயபூமியில்
இருப்புக்கொள்ள
நரித்தனமாய்
ஆக்கப்படும் பல்செயலில்
புத்தரின் வருகையும் ஒன்று
பாவம் கௌதமபுத்தர்
மௌனமாய் இருப்பதால்
மலிவாக ஆகிவிட்டார்
மலிவாக்கப்பட்டு
மனிதாபிமானத்தைக் கொன்றுபுதைக்க-தமிழ்
மக்களை இல்லாதொழிக்கப்
பலியாகிறார் போல

அது போக
புத்தரை நிர்மாணிக்க
வந்த காவிக்காரர் 
“ஒக்கமே ஹொந்தாய்”
புத்தரும்பிள்ளையாரும் 
ஒருத்தருக்கொருத்தர்
ஹொந்தாய்”
என்றாராம்.
அட நீயும் நானும்
மாமனும் மச்சானுமா கொண்டாட?

இன்னும் பத்து வருசத்தில்
“ஒக்கமே தமிழர் காலி”
இது சிங்கள ஏரியா என்று
பிக்குகள் சொல்லும்
மகாவம்சத்தில்
மண்ணோடு மண்ணாகும் தமிழர்வம்சம்.-எம்மை
இருக்க இடமில்லாமல்
உரிமையில்லா ஓட்டாண்டி ஆக்க
பல்லைக்காட்டும் சிங்களத்தை
இப்போதே தடுக்காவிட்டால்
“ஒக்கமே” அழிவுதான்

மக்களையும் மண்ணையும் -தமிழர் 
மானத்தையும் காப்போம் என்று 
அரசியல் செய்வோரே
புத்தரின் பவனியும்
புதுநிர்மாணமும் உங்கள்
புத்திக்கு எட்டாதவையோ??

படித்துப்படித்துத்
தலைவர் சொன்னதுதான்.
நாம் வலுவிழந்தோமானால்
எமதென்றதெல்லாமே
பறிக்கப்பட்டு
உரிமையில்லா சடங்களாய்
ஆக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு
அழிக்கப்படுவோம்..என்பதே

புத்தருக்கு எங்கள் மண்ணில்
என்ன வேலை ? 
புத்தரின் பெயரால்
தமிழினவழிப்புச் செய்யும்
சிங்கள நரிகளுக்காய்
அங்கங்கே குந்தியிருந்து
சிங்கள மயமாக்கும்
அரச உத்தியோகமா?

– கலைமகள் 

Share This: